Tuesday, 29 May 2012

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்வித்தகுதியை நாளை முதல் பள்ளியிலேயே இணையதளத்தில் பதிவுசெய்யலாம் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சிறப்பு ஏற்பாடு

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை நாளை (புதன்கிழமை) முதல் ஜுன் 13-ந் தேதி வரை பள்ளியிலேயே இணையதளத்தின் மூலம் பதிவுசெய்யலாம். அவர்கள் அனைவருக்கும் மே மாதம் 30-ந் தேதியிட்ட பதிவுமூப்பு வழங்கப்படும்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 8 லட்சத்து 23 ஆயிரத்து 208 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் 7 லட்சத்து 56 ஆயிரத்து 464 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளிலேயே அவர்களது கல்வித்தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே ஆன்லைனில் பதிவுசெய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து மேற்கொண்டுள்ளன.

மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பெற பள்ளிக்குச் செல்லும் பொழுது தங்களது குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) மற்றும் சாதிச் சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும். குடும்ப அட்டையில் பதிவுதாரரின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியினை ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும்.

தற்பொழுது புதிதாகப் பதிவு செய்ய விரும்புவோருக்கு புதிய பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை பதிவு செய்யும் நாளிலேயே உடனுக்குடன் வழங்கப்படும். மாணவ, மாணவிகள் மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் தங்களுடைய கல்வித் தகுதியை பள்ளிகளில் பதிவு செய்த பின்னர், தங்களுடைய முன்னுரிமையை வேறொரு வேலைநாளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் நாளை (புதன்கிழமை) பள்ளிக் கல்வித் துறையினரால் வழங்கப்பட உள்ளது. நாளை முதல் ஜுன் மாதம் 13-ந் தேதி வரை (15 நாட்களுக்குள்) அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு செய்து வேலைவாய்ப்பு அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்யப்படும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பிளஸ்-2 கல்வித்தகுதிக்கு மே மாதம் 30-ந் தேதியிட்ட பதிவுமூப்பு (சீனியாரிட்டி) வழங்கப்படும்.

கடந்த காலங்களில் தேர்வு முடிவு வெளியிடுவதை ஒட்டி ஒரேநாளில் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களை நாடுவதன் மூலம் ஏற்படும் காலவிரயம் மற்றும் போக்குவரத்து செலவினை முற்றிலும் தவிர்ப்பதற்காக பள்ளிகளின் வாயிலாகவே இணையதளம் மூலம் பதிவுசெய்து கொள்ள இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..

எனவே, இந்த வசதியை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் பிளஸ்-2 கல்வித்தகுதியை தாங்கள் படித்த பள்ளிகளிலேயே பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

TRB