Tuesday, 14 October 2014

ஜெ. ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 17-ந்தேதி நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 17-ந்தேதி நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த செப்டம்பர் 27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவும் மற்றும் 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீனில் விடுவிக்கக்கோரி மனு இந்த நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்கக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதுதவிர தனிக்கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தண்டனையை நிறுத்தி வைக்க வலியுறுத்தியும், தங்களுடைய சொத்துகளை விடுவிக்கவேண்டும் எனக்கோரியும் தனித்தனியாக 4 மேல் முறையீடு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மாதம் 29-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் கர்நாடக ஐகோர்ட்டில் விடுமுறை கால நீதிபதி ரத்தினகலா முன்னிலையில் கடந்த 30-ந்தேதிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் இல்லாமல் மனுவை விசாரிக்க முடியாது என்று நீதிபதி ரத்தினகலா விசாரணையை தள்ளிவைத்தார். இதைத்தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் இந்த மனுவை அவசர அடிப்படையில் விசாரிக்கவேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை ஐகோர்ட்டின் வழக்கமான அமர்வுக்கு மாற்றி கடந்த 1-ந்தேதி நீதிபதி ரத்தினகலா உத்தரவிட்டார். அதன்படி, தசரா விடுமுறைக்கு பின் கடந்த 7-ந்தேதி கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கலாம் என்று அரசு தரப்பில் விரும்பினாலும் குற்றத்தின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி சந்திரசேகர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார். கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்ததால் ஜெயலலிதா சார்பில் கடந்த 9-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதாவுடன் சிறையில் உள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரது ஜாமீன் மனுக்களும் மறுநாள் தாக்கல் செய்யப்பட்டன. ஜெயலலிதா சார்பில்சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- 66 வயதில் நான் பல்வேறு நோய்களால் உடல் நலிவுற்று இருக்கிறேன். எனவே எனது வயதையும், உடல் நிலையையும் கருத்தில் கொண்டு உடனடி நிவாரணம் பெறும் விதமாக என்னை ஜாமீனில் விடுவிக்கவேண்டும். மேலும், நான் 4 ஆண்டுகள்தான் சிறைத் தண்டனை பெற்றுள்ளேன். நான் மூத்த பிரஜையாகவும், பெண்ணாகவும் இருப்பதால் எனக்கு ஜாமீன் அளித்திடவேண்டும். நான் சட்டத்தை மதித்து நடக்கும் பிரஜை ஆவேன். எனவே கோர்ட்டின் நீதிக்கு முன்பாக நான் தலைமறைவாகிவிட வாய்ப்பில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்றுசுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பாலி எஸ். நாரிமன், தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பிலோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்விடம் ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார். மேலும் ஜாமீன் மனுவை அவசர மனுவாக கருதி இந்த வாரத்திலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி சார்பில் மூத்த வக்கீல் சுஷில் குமார் இவர்களுடைய ஜாமீன் மனுக்களின் மீதான விசாரணைக்கான வேண்டுகோளை முன்வைத்தார். இந்த வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வருகிற 17-ந்தேதிக்கு (வெள்ளிக்கிழமை) இந்த மனுக்களின் மீதான விசாரணை நடைபெறும் என்று உத்தரவு பிறப்பித்தனர். எனினும், எந்த நீதிபதியின் தலைமையிலான அமர்வின் கீழ் இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் என்பது வரும் 16-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று தெரியவரும்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,