Friday, 10 October 2014

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதா, 13 நாட்களாக
சிறையில் இருந்து வருகிறார். தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் கேட்டும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்நிலையில், ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மாலை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், 66 வயதாகும் மூத்த குடிமகளான எனக்கு மருத்துவரீதியான பிரச்சினைகள் உள்ளன. சிறப்பு நீதிமன்றம் விதித்துள்ள தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்யக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பு கிடைக்க குறைந்தது நான்கு ஆண்டுகள் ஆகும். எனவே, இடைக்காலத்தில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’என்று கூறப்பட்டுள்ளது. இம்மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜாமீன் மனு மீது ஜெயலலிதா சார்பில், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜராகி வாதாட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மட்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,