Monday, 6 October 2014

கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு.

கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா கூறினார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். அவர் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்ட ஐகோர்ட்டு விடுமுறை கால நீதிபதி ரத்தினகலா, அதன் மீதான விசாரணையை வழக்கமான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
தசரா விடுமுறை இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைவதால் கர்நாடக ஐகோர்ட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. ஐகோர்ட்டு நீதிபதி சந்திர சேகர் முன்னிலையில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக, சொத்து குவிப்பு வழக்கில் பவானிசிங்குக்கு முன்பு அரசு சார்பில் சிறப்பு வக்கீலாக ஆஜராகி வாதாடிய ஆச்சார்யா கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-

சொத்து குவிப்பு வழக்கில் அரசு சார்பில் நான் ஆஜராகி வந்தேன். எனக்கு பல்வேறு இடங்களில் இருந்து நெருக்கடி அதிகமாக வந்தது. வேறு வழியில்லாமல் நான் அந்த பதவியில் இருந்து விலகினேன். தமிழ்நாட்டில் இந்த வழக்கு விசாரணை சரியாக நடைபெறவில்லை என்ற காரணத்தால் தான் சுப்ரீம் கோர்ட்டு அந்த வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றியது.அரசு வக்கீலை நியமிக்கும் அதிகாரத்தையும் கர்நாடக அரசுக்கு வழங்கியது. ஆனால் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன் நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. அதன்படி வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதில் எனக்கு முக்கிய பங்கு உள்ளது என்று நான் சொல்ல மாட்டேன். சட்டப்படி அது நடைபெற்று முடிந்து உள்ளது. குற்றவாளிகள் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளனர்.

இதுபோன்ற வழக்குகளில் 5 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால், அந்த தண்டனையை நிறுத்திவைத்து அவர்களை ஜாமீனில் விடுதலை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கூறியுள்ளது. அதன்படி குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு ஆச்சார்யா கூறினார்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,