Thursday, 26 May 2016

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் | சென்னை மாநகராட்சி பள்ளிகள் 95 சதவீதம் தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 95 சதவீதம் தேர்ச்சி முதல்-அமைச்சரின் 48 வகை சலுகைகள் தான் காரணம் என சைதை துரைசாமி பெருமிதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளில், சென்னை மாநகராட்சி பள்ளிகள் 95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதற்கு முதல்-அமைச்சரின் 48 வகை சலுகைகள் தான் காரணம் என சைதை துரைசாமி பெருமிதம் கொண்டார்.
பாராட்டு விழா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் சென்னை மாநகராட்சி அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் பி.சந்திரமோகன் விழாவுக்கு முன்னிலை வகித்தார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மேயரும், கமிஷனரும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். மாநகராட்சி பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் சாதனைகள் குறித்து பெருநகர மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 70 சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 3 ஆயிரத்து 29 மாணவர்கள், 3 ஆயிரத்து 579 மாணவிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 608 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்கள். 95 சதவீதம் தேர்ச்சி அதில், 2 ஆயிரத்து 803 மாணவர்கள், 3 ஆயிரத்து 470 மாணவிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 273 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி விகிதம் 95 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை காட்டிலும் 3 சதவீதம் அதிகமாகும். இந்த தேர்வில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எஸ்.புவனேஸ்வரி, எம்.இ.அனிதா ஆகியோர் தலா 492 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பெற்றுள்ளனர். இதே போன்று கோயம்பேடு சென்னை மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.ஜெயப்பிரியா, சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மல்வின் ரோஷன் ஆகியோர் தலா 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். பெரம்பூர் மார்க்கெட் தெரு சென்னை மேல்நிலைப்பள்ளி மாணவி சிந்தியா 488 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தை பெற்றுள்ளார். தலா ரூ.1 லட்சம் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ-மாணவிகளில் 56 பேர் சமூக அறிவியல் பாடத்திலும், 15 பேர் கணிதத்திலும், 7 பேர் அறிவியல் பாடத்திலும் என மொத்தம் 78 மாணவ-மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆயிரத்து 149 மாணவ-மாணவிகள் 400-க்கு அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 250 மாணவ-மாணவிகள் 450-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சென்னை பெருநகர மாநகராட்சி பள்ளிகளில் 19 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இந்த பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா தான் காரணம் மொத்தத்தில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா வழங்கியுள்ள 48 வகையான திட்டங்கள் மற்றும் சலுகைகள் காரணமாகத்தான் சென்னை பெருநகர மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆக மாநகராட்சி பள்ளிக்கூட மாணவர்களின் 95 சதவீத வெற்றிக்கும், ஆண்டுக்கு ஆண்டு கல்வித் தரம் உயர்ந்து, சாதனை படைத்து வருவதற்கும் முழுக்க முழுக்க காரணம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான். இவ்வாறு அவர் கூறினார். ஆசிரியர், டாக்டர்... முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகள் எஸ்.புவனேஸ்வரி ஆசிரியராகவும், எம்.இ.அனிதா டாக்டராகவும் ஆக விரும்புகின்றனர். இரண்டாம் இடம் பிடித்த மாணவி மல்வின் ரோஷன், மூன்றாம் இடம் பிடித்த மாணவி சிந்தியா ஆகியோர் என்ஜினீயர் ஆவதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.


No comments: