Thursday, 26 May 2016

இந்த ஆண்டு விலக்கு அளித்த மத்திய அரசுக்கு நன்றி: எதிர்காலத்திலும் மருத்துவ நுழைவுத்தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

 இந்த ஆண்டு விலக்கு அளித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எதிர்காலத்திலும் மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- மத்திய அரசுக்கு நன்றி மருத்துவ பட்டப்படிப்பில் சேர, நடப்பு கல்வியாண்டில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அவசர சட்டம் இயற்றியதற்கும், இதற்காக துரிதமாக செயல்பட்டதற்கும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன அழுத்தமும் தற்காலிகமாக நீங்கியுள்ளது. இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும் என்ற ஆவலும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கிராமப்புற எளிய மாணவ-மாணவிகளின் நலனைக் கருதி, 2005-ம் ஆண்டு மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ததை நினைவு கூறுகிறேன். இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் அப்போது பெறப்பட்டது. மருத்துவ பொது நுழைவுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்து இயற்றிய சட்டத்தை, சென்னை ஐகோர்ட்டு நிறுத்தி வைத்தது. அதனை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. கிராமப்புற மற்றும் எளிய மாணவ-மாணவியர்கள் மருத்துவக் கல்வி பெற எனது தலைமையிலான தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக, கிராமப்புற மாணவர்கள் நுழைவுத் தேர்வில் பங்கேற்க இயலாது என்பதில் தமிழக அரசு உறுதியுடன் இருக்கிறது. தேசிய அளவிலான மருத்துவ தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை புகுத்துவது மாநில அரசின் சமூக மற்றும் பொருளாதாரம் சார்ந்த கொள்கைகளை நிறைவேற்றுவதையும், அதன் நோக்கங்களை அடைவதையும் பயனளிக்காமல் செய்துவிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எதிர்காலத்திலும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் வெளிப்படையான முறையில் மாணவர்களை சேர்க்கும் தமிழக அரசின் நடவடிக்கையை உறுதிபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.


No comments:

TRB