Tuesday, 31 January 2017

சிறப்பு பாஸ்போர்ட் மேளா 4-ந் தேதி சென்னையில் நடக்கிறது

சிறப்பு பாஸ்போர்ட் மேளா 4-ந் தேதி சென்னையில் நடக்கிறது | சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் வரும் 4-ந் தேதி (சனிக் கிழமை) சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடக்கிறது. இதுகுறித்து பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் வரும் 4-ந் தேதி (சனிக்கிழமை) சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடக்கிறது. இதனையொட்டி சென்னை சாலிகிராமம், தாம்பரம் மற்றும் அமைந்தகரை (நெல்சன் மாணிக்கம் சாலை) ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையம் வரும் 4-ந் தேதி (சனிக்கிழமை) வழக்கம் போல் செயல்படும். பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் விண்ணப்பங்கள் வழக்கம் போல் பெற்றுக்கொள்ளப்படும். சுமார் 2 ஆயிரத்து 400 விண்ணப்பதாரர்கள் இந்த சிறப்பு மேளாவின் மூலம் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாஸ்போர்ட் மேளாவில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பாஸ்போர்ட் அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.passportindia.gov.in மூலம் ஆன்லைனில் பதிவு செய்து, விண்ணப்ப பதிவு எண்ணை (.ஆர்.என்.) பெற்றுக்கொண்டு, ஆன்லைனிலேயே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி சந்திப்பு முன்பதிவு நேரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த மேளாவில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது சந்திப்பு முன்பதிவு விவரம் கொண்ட .ஆர்.என். பதிவு எண் தாளை அச்சிட்டு எடுத்து வரவேண்டும். தேவையான அனைத்து ஆவணங்களை அசலுடன், சுய சான்றளிக்கப்பட்ட ஒரு நகலுடன் கொண்டு வரவேண்டும். புதிய பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பம், காவல்துறை தடையின்மை சான்றிதழ் (பி.சி.சி.) பிரிவிலும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும். இந்த மேளாவில் தட்கல் (உடனடி பாஸ்போர்ட்) விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த மேளாவிற்கான சந்திப்பு முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணிக்கு திறக்கப்படும். மேளா நாளன்று, குறித்த நேரத்திற்கான விண்ணப்பதாரர்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்படுவார்கள். நிறுத்திவைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் விண்ணப்பதாரர்கள் மற்றும் மறுக்கப்பட்ட டோக்கன்கள் வைத்திருப்போர் மற்றும் மையத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பம் செய்ய வருபவர்கள் இந்த மேளாவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments: