Saturday, 1 April 2017

‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 5-ந்தேதி வரை அவகாசம் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க 5-ந்தேதி வரை அவகாசம் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி | 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 5-ந்தேதி அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் 'நீட்' பொது நுழைவு தேர்வை எழுதுவதற்கான வயது உச்ச வரம்பை 25 ஆக சி.பி.எஸ்.இ. நிர்ணயித்து உள்ளது. இந்த ஆண்டு தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் மார்ச் 1-ந்தேதி என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வு அடுத்த மாதம்(மே) 7-ந்தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. 'நீட்' தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் வைத்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு சென்னை, திருச்சி, மதுரை, கோவை, மதுரை, சேலம் ஆகிய 5 நகரங்கள் மட்டுமே இதுவரை மையங்களாக செயல்பட்டு வந்தன. தற்போது கூடுதலாக நெல்லை, வேலூர், நாமக்கல் ஆகிய 3 நகரங்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. வயது உச்சவரம்பு தளர்வு இந்த நிலையில், நீட் தேர்வு எழுதுவதற்கு சி.பி.எஸ்.இ. நிர்ணயித்து இருந்த 25 வயது என்ற உச்சவரம்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டிய தேதியையும் நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், நடப்பு நீட் தேர்வில் (2017) 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டு தேர்வு எழுதலாம் என்றும், அடுத்த கல்வியாண்டில் வயது உச்சவரம்பை சி.பி.எஸ்.இ. நிர்ணயிக்கலாம் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய தேதியை வருகிற 5-ந்தேதி வரை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments: